திருவண்ணாமலை மலை சரிவிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திருவண்ணாமலையில் நீர்நிலைகள், மலைச்சரிவை ஆக்கிரமித்துள்ள 300 பேரை அப்புறப்படுத்துவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என மனுதாரர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார். உரிமமோ, குத்தகையோ என எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், ஏன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திருவண்ணாமலை மலை சரிவிலும், நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்க தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்த நீதிபதிகள் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.