பாஜக ஆதரிப்பதால் SIR ஐ ஆதரிக்கவில்லை எனவும்,வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அதிமுக ஆதரிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அதிகளவில் தவறுகள் மற்றும் குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆதிராஜராம், வருகை ரவி, தி நகர் சத்யா, பாலகங்கா, ஆர் எஸ் ராஜேஷ், கந்தன், வி எஸ் பாபு உள்ளிட்ட சென்னை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், திமுக அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். சென்னை மாநகராட்சி ஆணையர் திமுக மாவட்ட செயலாளரை போல செயல்படுவதாக விமர்சித்த ஜெயக்குமார், அடுத்தது அதிமுக ஆட்சி தான் மலர உள்ளது, எனவே அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு துதி பாடுவதை அரசு அதிகாரிகள் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள் என எச்சரித்தார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “தமிழக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்குங்கள் என 20 வருடங்களாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம், SIR மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு. சென்னையில் சில தொகுதிகளை ஆய்வு செய்ததில் 1500 வாக்குகள் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், விலாசம் இல்லாதவர்கள் உள்ளதை கண்டறிந்துள்ளோம். திமுக இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்கள் என கள்ள ஓட்டை நம்பி தான் உள்ளது. அதன் மூலம் தான் அவர்கள் போலியான வெற்றிகளை பெற்று வருகிறார்கள். அதனால் தான் SIR ஐ பார்த்து திருடனுக்கு தேள் கொட்டியது போல உள்ளது. SIR ஐ எதிர்க்கும் திமுக, ஏன் SIR பணிகளை செய்ய வேண்டும். புறக்கணிக்திருக்கலாமே.. பெயரளவுக்கு SIR ஐ எதிர்த்துவிட்டு, முழுக்க முழுக்க முறைகேடுகளில் திமுக ஈடுபடுகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னை மாவட்ட அமைச்சர்களின் கட்டளையின் படி மாவட்ட செயலாளரை போல செயல்படுகிறார். இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல். அதனை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கும் அரசியல்வாதிகள் ஆட்சி முடிந்ததும் சென்றுவிடுவார்கள். மாட்டுவது அதிகாரிகள் தான். அதனால் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்..இல்லாவிட்டால் அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய விளைவை சந்திக்க நேரிடும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் தான் SIR ஐ அதிமுக ஆதரிக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் திருத்த பணியை முறையாக செய்யுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசு தான் செய்ய வேண்டும். பாஜக ஆதரிப்பதால் மட்டும் sir ஐ ஆதரிக்கவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஆதரிக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளார்கள். அதில் வாக்காளர் பெயர் இல்லை என்றால் முறையிட வாய்ப்பு உள்ளது. பிறகு ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையரை திமுக மிரட்டுகிறது. அவர்கள் மிரட்ட தான் செய்வார்கள். நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். அதிமுக ஒரு போதும் அதிகாரிகளை மிரட்டியது. கடமையை செய்யுங்கள் என கூறுகிறோம் அவ்வளவு தான்” என பதிலளித்தார்.