ஊழலுக்காக தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு, மத்திய அரசின் மீது பழி போடக் கூச்சமாக இல்லையா..? அண்ணாமலை கேள்வி..!
Seithipunal Tamil November 21, 2025 12:48 PM

நெல் மூட்டைகளை பாதுகாக்க, மத்திய அரசு கொடுத்த நிதியில், எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா..? விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ரூ.309 கோடி எங்கே சென்றது..? என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் , துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர்.

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ.309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ரூ.309 கோடி எங்கே சென்றது?

குறித்த நேரத்தில் திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், ரூ.160 கோடி ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் 30 முதல் - 40 நாட்கள் தாமதம் ஏற்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதல்வரரோ, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை? கொள்முதல் செய்வதில் திமுக அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்?

ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்வதில், திமுக அரசு வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகின்றன. ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் மீது பழி போடக் கூச்சமாக இல்லையா? என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.