காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் ஜம்மு அலுவலகத்தை, ஜம்மு-காஷ்மீர் போலீஸ் புலனாய்வு படையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து ஏகே ரக ரைபிள் தோட்டாக்கள், கைத்துப்பாக்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுளுக்கான லிவர்கள் பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் மாநில புலனாய்வு அமைப்பினர், ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து, கணினிகள் உட்பட வளாகத்தை சிறப்பு புலனாய்வு குழுக்கள் முழுமையாக சோதனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாள், 1954-ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் நிறுவப்பட்டது.குறித்த பத்திரிகை நீண்ட காலமாக பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. ஜம்மு பிரஸ் கிளப்பின் தலைவராகவும் பணியாற்றிய வேத் பாசின் சமீபத்திய ஆண்டுகளில் காலமானார்.
அதன் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால், அவரது கணவர் பிரபோத் ஜாம்வாலுடன் சேர்ந்து நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். தற்போது அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஜம்வால் வெளிநாட்டில் உள்ளனர். இந்த செய்தித்தாள் 2021-22-ஆம் ஆண்டு முதல் ஜம்முவிலிருந்து அதன் அச்சுப் பதிப்பை வெளியிடவில்லை. ஆனாலும், அதன் ஆன்லைன் பதிப்பு செயல்பாட்டில் உள்ளது.
போலீசாரின் இந்த சோதனைக்கு பிரிவினைவாத ஆதரவு தலைவரான மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.