செல்லப் பிராணிகள் உரிமத்தில் பெரிய மாற்றம்... "வாய் கவசம் கட்டாயம் இல்லை" - மாநகராட்சி புதிய தகவல்!
Dinamaalai November 26, 2025 03:48 PM

சென்னை மாநகரத்தில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவது குறித்த விதிமுறைகளில் சென்னை மாநகராட்சி தரப்பில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிமம் பெறுவதற்கான அவகாசம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் நிறுவனரான ஜி.அருண்பிரசன்னா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை மாநகராட்சி வளா்ப்பு நாய்களுக்குப் பொது இடங்களில் வாய் கவசம் அணிவிப்பது, கழுத்தில் பெல்ட் அணிவிப்பது, உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிப்பது, அத்துடன் ஒரு நபருக்கு 4 வளா்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் என்ற கட்டுப்பாடு விதித்திருப்பது போன்ற பல்வேறு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள், கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்த நாய்களை எடுத்து வளர்க்கும் அமைப்புகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், இந்த விதிமுறைகள் குறித்துப் புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மாநகராட்சி அளித்த விளக்கங்கள், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஒருபுறம் ஆறுதலையும், மறுபுறம் சில கட்டுப்பாடுகளையும் அளிப்பதாக உள்ளன.

மாநகராட்சி அளித்த முக்கிய விளக்கங்கள்:

வளா்ப்பு நாய்களைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, வாய் கவசம் அணிவிப்பது கட்டாயம் இல்லை. இருப்பினும், நாய்களின் கழுத்தில் கட்டாயம் பெல்ட் அணிவித்து, உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தே அழைத்துச் செல்ல வேண்டும். சென்னையில் இதுவரை நாய் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளுக்கு ஒருமுறை மட்டுமே மைக்ரோசிப் பொருத்தினால் போதுமானது.

மிக முக்கியமாக, ஒருவர் 4 வளா்ப்புப் பிராணிகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார் என்ற கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. நாய்கள் உள்ளிட்ட வளா்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்து உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி அளித்த இந்த விளக்கங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட இந்த விதிமுறைத் திருத்தங்களை ஒரு வார காலத்திற்குள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார். இந்தத் தீர்ப்பு, செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.