கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?
Vikatan November 26, 2025 03:48 PM

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை (SIT), சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை மற்றும் வீடியோ ஆவணங்கள் ஆகியவற்றை சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

cbi investigation

அதன் அடிப்படையில், கடந்த  அக்டோபர் 17- ம் தேதி சி.பி.ஐ  வழக்கு பதிந்து, கரூர் சி.ஜே.எம்-1 நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்களை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், தற்காலிக விசாரணை முகாம் அமைத்து, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அளித்து நேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தியுள்ளது.

சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களை த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முழு வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் மற்றும் ட்ரோன் கேமரா காட்சிகள் உள்ளிட்டவை சி.பி.ஐ தற்காலிக அலுவலகத்தில் கடந்த 8 -ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 5 பேர் சி.பி.ஐ விசாரணைக்கு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆஜராகினர். இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் அவர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று(25-11-2025) காலை 10 மணி அளவில் இரண்டாவது நாளாக சி.பி.ஐ அலுவலகத்திற்கு, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகினர்.

சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் த.வெ.க-வைச் சேர்ந்த சிலர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று விசாரணைக்காக இரண்டாவது நாளாக ஆஜராகினர்.

இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்றைய விசாரணையில், காலை 10 மணிக்கு தவெக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் வருகை தந்த த.வெ.க கட்சி நிர்வாகிகளிடம் மாலை வரை விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய்க்கு இதுவரை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கவில்லை என்றாலும் விரைவில், சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதேபோல், த.வெ.க தரப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் 41 பேர் பலியான சம்பவத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

cbi investigation

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், த.வெ.க கூட்டத்திற்கு காவல்துறை அனுமதியுடன் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என த.வெ.க தரப்பு கணித்திருந்தது, பிரசார வாகனத்தின் முன்பும் பின்பும் எத்தனை வாகனங்கள் கூட்டத்திற்குள் சென்றது , நடிகை விஜய் எத்தனை மணிக்கு பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தார், பிறகு ஏன் தாமதமாக கூட்டத்தில் கலந்து கொண்டார், சம்பவம் நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டு விசாரணை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், த.வெ.க தரப்பு வழங்கிய கூட்டம் நடைபெற்ற முழு வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள், ட்ரோன் கேமரா காட்சி பதிவுகள் கொண்டு, செயற்கையாக கூட்ட நெரிசல் உண்டாக்கப்பட்டதற்கான காட்சி பதிவுகள் உள்ளனவா என்பதையும் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.