பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சென்னை ஆவடி அடுத்த சேர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனநல காப்பகத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது காப்பகங்கள் மீதான நம்பகத்தன்மையை சிதைத்துள்ளது. வீட்டில் பராமரிக்க முடியாத மன நலம் குன்றியவர்களை காப்பகத்தில் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்கனவே பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, சிறார்களுக்கு கூட பாதுகாப்பு இல்லா நிலை என்ற அவலங்கள் தொடரும் நிலையில் தற்போது காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உயிரையே பலிவாங்கியிருப்பது இந்த அரசு மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையின்மையையே காட்டுகிறது.
மனநலக் காப்பகங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளனவா, பராமரிக்கும் பொறுப்பாளர்கள் அதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனரா, அவசர கால மருத்துவ வசதி செயல்படுகிறதா போன்றவற்றை மறுசீராய்வு செய்து இதுபோன்ற ஆதரவற்றோர், மனநலக் காப்பகங்களை முறைப்படுத்த அரசை வலியுறுத்துகிறேன். உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறையினரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.