'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவர் நடிகர் விஜய், முதல் முறையாக புதுச்சேரியில் சாலைவலம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்வு டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சி சார்பில் புதுச்சேரி காவல்துறை இயக்குநரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவின்படி, விஜய்யின் சாலைவலம் காலாப்பட்டில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாகச் செல்ல உள்ளது. உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் அவர் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.
கரூர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிறகு, சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உட்புற அரங்கு கூட்டத்தில் விஜய் மக்களை சந்தித்த நிலையில், புதுச்சேரியில் அவர் மேற்கொள்ளும் இந்த சாலைவல பரப்புரை, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி கோரப்பட்டுள்ளது.
Edited by Mahendran