மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்த கருத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வாதாடிய விகாஸ் சிங், "தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளியாகி விவாதமானது.
இந்நிலையில், நேற்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் வேறொரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுக்காக விகாஸ் சிங் காணொலி வாயிலாக ஆஜரானார். அப்போது விகாஸ் சிங்கிடம் இது குறித்து விளக்கம் கேட்ட நீதிபதி, "என்னைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்துக்களை நாளிதழ்கள் மூலம் அறிந்தேன். இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கறாராக தெரிவித்தார்.
மேலும், "தற்போது உங்களிடம் பேசப் போவதில்லை. தமிழக தலைமை செயலரின் கருத்தை அறிந்த பிறகே விசாரணை தொடரும்" என்று கூறிய நீதிபதி, விகாஸ் சிங்கின் ஆடியோவை 'மியூட்' செய்ய உத்தரவிட்டு, தலைமை செயலரிடம் விசாரணையை தொடர்ந்தார். ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிபதியின் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து விமர்சித்ததும், அதற்கு நீதிபதியே நேரடியாக பதில் கேட்டதும் நீதிமன்ற வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran