ஈரோட்டில் தொண்டர் படையை வழிநடத்தும் செங்கோட்டையன்.. களத்தில் நின்று போட்ட பரபரப்பான உத்தரவுகள்..!
WEBDUNIA TAMIL December 18, 2025 10:48 PM

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் பிரசார கூட்டத்தில், தொண்டர்களை முறைப்படுத்துவதிலும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையன் முன் நின்று இளைஞர் படையை வழி நடத்தி வருகிறார்.

கூட்டத்திற்கு வரும் வாகனங்களை வரிசைப்படுத்துவது மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்புகொள்வதில் தொண்டர்களிடையே பெரும் வேகம் காணப்படுகிறது. "வண்டி வரிசையாக நிற்கிறது, சீக்கிரம் வந்து பாருங்கள்" என்றும், "கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் எங்கே இருக்கிறார்கள்?" என்றும் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

குறிப்பாக, பாதுகாப்பு காரணங்களுக்காக தொண்டர் படையினர் ஒவ்வொரு பகுதிக்கும் நான்கு நான்கு பேராக பிரிந்து சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய்யின் வருகைக்காக தொண்டர்கள் காத்திருக்கும் வேளையில், " தொண்டர் படையின் கேப்டன் அலுவலகத்தில் இருக்கிறார்களா அல்லது கிளம்பிவிட்டார்களா?" என்ற கேள்விகளை செங்கோட்டையன் எழுப்பி வருகிறார். நெட்வொர்க் சரியாக கிடைக்காத இடங்களிலும், மேடையில் இருந்து வரும் அறிவிப்புகளை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்ப தொண்டர்களை அமர வைப்பதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எவ்விதப் பதற்றமும் இன்றி, "எல்லாம் சரியாக நடக்கும், பயப்பட வேண்டாம்" என்று செங்கோட்டையன் தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கரூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதில் கொண்டு, இந்த முறை தொண்டர் படை மிக விழிப்புடன் செயல்படுகிறது. வண்டிகள் நிற்கும் வரிசை முதல், உள்ளே வரும் நபர்களின் அனுமதி வரை அனைத்தும் கட்சித் தலைமை வழங்கிய அறிவுறுத்தலின் படி மிக கச்சிதமாக நடைபெற்று வருகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.