நடிகை தேவயானியின் கணவரும் இயக்குநருமான ராஜகுமாரன் சமீப காலமாக தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் அளித்து வருகிறார். இந்த பேட்டிகள் பெரும்பாலும் விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வரும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விக்ரமன் இயக்கத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜகுமாரன், அஜித், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் போதே ராஜகுமாரன் – தேவயானி காதல் அடுத்த கட்டத்துக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தேவயானி வீட்டை விட்டு வெளியே வந்து ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய ராஜகுமாரன், இடையே நடிகராகவும் தலைகாட்டினார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகளான இனியா தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கவனம் பெற்றார். சமீபத்தில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இனியா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் ராஜகுமாரன், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். அந்தப் படத்தின் கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறிய அவர், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிப்பார் என்றும், தனது மகள் இனியா ஹீரோயினாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதையை நினைவூட்டுவதற்காக தேவயானியும் இப்படத்தில் இடம்பெறுவார் என்றும் கூறினார்.
விஜய் தன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய ராஜகுமாரன், “விஜய் நடிக்கவில்லை, குறைந்தது அவரது மகனாவது என் படத்தில் நடிக்கட்டுமே” என்று கூறியது சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. இந்த அறிவிப்பு உண்மையாகுமா அல்லது பேட்டிக்கான கருத்தா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.