தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வருகை அதிமுக பாஜக கூட்டணிக்கான முக்கிய திருப்புமுனையாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக தொடங்கப்படாத நிலையில், பியூஷ் கோயல் வருகையின் போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தொடக்க கட்ட ஆலோசனைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே பிரசாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் உறுதியான வடிவத்தை எட்டாத நிலையிலேயே உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில் அனுபவம் வாய்ந்த தலைவராக பியூஷ் கோயலுக்கு தமிழக தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சென்னை வரும் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே டிசம்பர் 17 அன்று சென்னையில் நடைபெற்ற பாஜக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் மேலிட தலைவர்கள் தமிழக வருகை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இறுதி வடிவம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.