சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உணவுப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மொறுமொறுப்பாகவும் அழகாகவும் மடித்துப் பரிமாறப்படும் மசாலா தோசையை, ஒரு தெருவோர வியாபாரி விசித்திரமான முறையில் கையாள்கிறார்.
தோசையை கல்லில் ஊற்றி அதன் மேல் மசாலாவை வைத்த பிறகு, முட்டை பொரியல் செய்யும் பாணியில் அதைத் துண்டு துண்டாகக் கொத்திச் சிதைக்கிறார். பின்னர் அதை ஒரு சிறிய பாத்திரத்தில் நிரப்பி, தேங்காய் சட்னி மற்றும் புதினா சட்னியுடன் ‘தோசை பிரியாணி’ அல்லது ‘தோசை புர்ஜி’ போலப் பரிமாறுகிறார்.
“>
தென்னிந்தியாவின் அடையாளமான தோசையின் தனித்துவத்தையே மாற்றும் இந்த விசித்திரமான முயற்சி இணையவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பார்த்த பல பயனர்கள், “இது தோசையை கொலை செய்வதற்கு சமம்” என்றும், “இதைச் செய்தவரை சிறையில் அடைக்க வேண்டும்” என்றும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் சிலர் நகைச்சுவையாக, “இவ்வளவு கஷ்டப்படுவதற்குப் பதில் நேரடியாக மிக்ஸியில் போட்டு ஜூஸாகவே கொடுத்திருக்கலாம்” எனக் கிண்டல் செய்கின்றனர். பாரம்பரிய உணவுகளுடன் தேவையற்ற சோதனைகளைச் செய்வது அந்த உணவின் ஆன்மாவையே சிதைப்பதாக நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தோசையின் அசல் சுவையையும் மொறுமொறுப்பையும் விரும்பும் உணவு ஆர்வலர்களுக்கு, இந்த ‘புர்ஜி’ ஸ்டைல் தோசை ஒரு ஜீரணிக்க முடியாத மாற்றமாகவே அமைந்துள்ளது.