தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு.. பயணிகள் ஷாக்!!
TV9 Tamil News December 22, 2025 04:48 PM

சென்னை, டிசம்பர் 22: கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பலமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிகளவிலான மக்கள் வந்து வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், தீபாவளி, பொங்கள், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் பயணிகள் அதிகரிப்பதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்துவது வழக்கமாக மாறியுள்ளது. இதனால், ஒவ்வொரு பண்டிகை, விடுமுறை நாட்ளின் போதும், சென்னையில் இருந்து சாமானிய மக்கள் தங்கள் சொந்த ஊர் சென்று வருவது என்பது பெரும் சவாலான காரியமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் விடுமுறை – தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் கட்டணம்:

பண்டிகை நாட்களில் பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேசமயம் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் பல தரப்பினர் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இந்த நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வருகின்றனர். சாதாரண நாட்களில் ரூ.1,000 வரை விற்பனையாகும் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.4,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துமஸ், பள்ளி அரையாண்டு விடுமுறை:

அந்தவகையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை முதல் மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுவதால், பலர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

ரூ.4,500 வரை கட்டணம் உயர்வு:

பொதுவாக சென்னையிலிருந்து கோவை, நெல்லை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, சென்னை – கோவை : ரூ. 4,000 வரை, சென்னை – நெல்லை / நாகர்கோவில் – ரூ.4,500 வரை, சென்னை – தூத்துக்குடி: ரூ.4,300 வரை, சென்னை – மதுரை: ரூ.2,500 முதல் ரூ.3,300 வரை, சென்னை – சேலம்: ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

பண்டிகைக்கு ஊருக்கு செல்வதே குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இந்த கட்டண உயர்வை பார்க்கும் போது ஊருக்கு செல்லவே அச்சமாக உள்ளது என கூறுகின்றனர். மேலும் அரசு தலையிட்டு இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.