இந்திய டி20 அணியில் சுப்மன் கில் நீக்கம் உணர்த்தும் சேதி
BBC Tamil December 22, 2025 05:48 PM
Getty Images

இந்தியாவிலும் இலங்கையிலும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விஷயம், சுப்மன் கில் அணிக்குத் தேர்வாகாததும், இஷான் கிஷன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்புவதும்தான்.

கில் நீக்கப்பட்டது, மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் என்ற திட்டத்தை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கைவிட்டுவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ரிங்கு சிங் அணிக்குத் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

இந்தியாவில் டி20 கிரிக்கெட் ஆட திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ரிஷப் பண்ட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அரை டஜனுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்,

சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர், சுப்மன் கில்லை அணியில் சேர்க்காததற்கு மோசமான ஃபார்ம் காரணம் என்று கூறவில்லை.

அணி அறிவிப்பின் போது சூர்யகுமார், "சுப்மன் கில் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்படவில்லை. இது அணி ஒருங்கிணைப்பு காரணமாக செய்யப்பட்டுள்ளது. நாங்கள் டாப்-ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பரை விளையாட வைக்க விரும்பினோம். கில்லின் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் ஒரு சிறந்த வீரர்," என்று கூறினார்.

ஆனால், கேப்டன் சூர்யகுமார் சிறிது காலத்திற்கு முன்பு தெரிவித்த கருத்து மூலம் கில் நீக்கம் குறித்து ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர், "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் தொடக்கத்தில் இருந்தே, நாங்கள் வெளிப்படுத்தி வரும் அதே வகையான கிரிக்கெட்டைத் தொடர விரும்பினோம். இதன் உண்மையான முடிவுகள் அனைவர் முன்பும் உள்ளன. ஆனால் கடந்த சில தொடர்களாக, எங்களால் அந்த வகையான கிரிக்கெட்டை விளையாட முடியாமல் இருந்தது" என்று கூறியிருந்தார்.

சூர்யகுமாரின் இந்த அறிக்கையிலிருந்து, கில் வந்த பிறகு எங்களால் ஆக்ரோஷமான பாணியில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை என்று அவர் கூற விரும்புவதாகத் தெரிகிறது.

உண்மையில், அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகு இரு முனைகளிலும் ரன் வேகத்தை அதிகரித்து, எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் கொடுக்க இந்திய அணியால் முடிகிறது.

அபிஷேக் - சஞ்சு சாம்சன் ஜோடியுடன் ஆட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கலாம்.

Getty Images கில் மீண்டும் கேப்டன் பதவிக்குத் திரும்பக் கூடும்

கடந்த சில போட்டிகளில் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம். இருப்பினும், உலகக் கோப்பைக்குப் பிறகு கில் இந்த வடிவத்திற்குத் திரும்புவது உறுதி. மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்பதில் தேர்வுக் குழு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த ஆண்டு அக்டோபரில் சுப்மன் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, மூன்று வடிவங்களிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு சூர்யகுமாரிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்து கில்லிடம் ஒப்படைப்பதே அந்தத் திட்டமாக இருந்தது. இருப்பினும், கில்லின் மோசமான ஃபார்ம் காரணமாக அந்த திட்டம் நடக்காமல் போய்விட்டது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் 'ஃபாலோ தி ப்ளூ' நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், "சுப்மன் கில் ஒரு தரமான வீரர். அவர் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். இரண்டு மூன்று போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்கத் தவறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எதிர்காலத்திற்கான வீரர், எனவே அணி நிர்வாகம் அவரிடம் பேசி நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும். அணியில் தேர்ந்தெடுக்கப்படாததால் அவர் சற்று அதிர்ச்சி அடைந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அவர் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் வர வேண்டும்."என்றார்.

தரம் என்பது நிரந்தரம், ஃபார்ம் என்பதுதான் தற்காலிகமானது என்று சுனில் கவாஸ்கரும் நம்புகிறார். இது, கில் மீண்டும் ரன்கள் அடிக்கத் தொடங்கியவுடன் டி20 வடிவத்தில் மீண்டும் களமிறங்குவார் என்பதைக் காட்டுகிறது.

இஷான் ஒரு சிறந்த வீரராகத் திரும்புகிறார் Getty Images

இஷான் கிஷன் இந்திய அணிக்குத் திரும்ப கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் அவர் ஒரு சிறந்த வீரராகத் திரும்பியுள்ளார். அதாவது, அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை தேர்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.

இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது அணி நிர்வாகத்திற்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அவர் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமல்ல, தேவைப்பட்டால் தொடக்க வீரராகவும் அவரால் களமிறங்க முடியும்.

2022-ல் சிட்டகாங்கில் நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த போது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது. இருப்பினும், டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் அவர் ஏமாற்றமடைந்திருக்கலாம். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர் பாதியிலேயே திரும்பியது ஒரு தவறான முடிவாக அமைந்தது.

அந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் இல்லாததுதான் துருவ் ஜூரலின் டெஸ்ட் வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது. அந்த நேரத்தில் அவர் சற்று நிதானமாக இருந்திருந்தால், அவர் திரும்ப வேண்டி இருந்திருக்காது.

இஷான் 2024-ல் தனது மீள்வருகையை தொடங்கினார். ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு திரும்ப தான் தயாராக இருப்பதை நிரூபித்தார்.

ஹரியானாவுக்கு எதிரான சையது முஷ்டாக் அலி இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஜார்க்கண்ட் அணியை சாம்பியனாக்கிய அவர், இந்திய அணிக்குத் திரும்புவதையும் உறுதி செய்தார்.

ரிங்கு வருகையால் துபேவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் Getty Images

ரிங்கு சிங் ஒரு சிறந்த ஃபினிஷராகக் கருதப்படுகிறார். இந்த பாத்திரத்தில் அவர் பலமுறை தன்னை நிரூபித்துள்ளார். இருப்பினும், சமீபகாலமாக, இந்த இடத்திற்கு ஷிவம் துபே மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கை காரணமாக, ரிங்கு அணியின் திட்டங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.

ஷிவம் துபேக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதுடன், மிதவேகப் பந்துவீச்சும் வீசுவார் என்பதுதான்.

ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடும் சிறப்பாக அமைந்துள்ளதால், ஷிவமிற்குப் பந்துவீச மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், அணி நிர்வாகம் ஒரு சிறந்த ஃபினிஷருடன் விளையாட முடிவு செய்தால், ரிங்குக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

குல்தீப் அணியில் இடம்பிடிப்பது கடினம்

அக்சர் படேலை அணியின் துணை கேப்டனாக நியமிப்பது, குல்தீப் விளையாடுவதற்கான வாய்ப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குல்தீப் விக்கெட் வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படுகிறார். அவர் பெரும்பாலும் நடு ஓவர்களில் எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

துணை கேப்டன் என்பதால் அக்சர் படேல் ஆடும் லெவனில் இடம்பெறுவார். மேலும் இந்த வடிவத்தில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்பதால் வருண் சக்கரவர்த்தி விளையாடுவார்.

இந்தச் சூழ்நிலையில், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடையே இருக்கும். வாஷிங்டன் சுந்தர் ஒரு சிறந்த பேட்டர் என்பதால், அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.