'2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்'
- ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.
ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார்.
விஜய்யின் இந்தக் கணிப்பு தேர்தலில் சாதகாமன ரிசல்ட் தருமா? கணிப்பின் பின்னணி என்ன? அரசியல் அரங்கில் பலதரப்பினரிடமும் பேசினோம்.
தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகனிடம் முதலில் பேசினோம்.
Raj Mohan - TVK திமுகவின் பயம்
!
''எதிரிகள் யார்ங்கிறது முக்கியமல்ல, அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதே முக்கியம்.
இன்னைக்கு திமுகவின் ஒவ்வொரு மேடையிலும் தவெகவின் தாக்கம் தான் அதிகம் எதிரொலிக்குது. காரணம் அந்தக் கட்சி எங்களைக் கண்டு தான் அதிகம் பயப்படுது. எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டிங்கிறதுக்கு இந்த சாட்சி போதாதா? திமுகதான் அப்படிச் சொல்ல வச்சது.
திமுக நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் 'திராவிட மாடல் 2.0’ என்பது மாற்றத்தை அல்ல ஏமாற்றத்தை தான் தந்தது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுவது உண்மையான அரசியல் மாற்றம். தளபதியின் வரவு அந்த மாற்றத்தை நிகழ்த்தும்னு அவங்க நம்புறாங்க. அதனால்தான் நாங்க மாற்று சக்தி அல்ல முதன்மை சக்தியாக வளர்ந்து நிற்கிறோம்னு சொல்றோம்'' என்கிறார் இவர்.
எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியால் முடியாது!
அந்தக் கட்சியைச் சேர்ந்த சம்பத் சில கருத்துகளைப் பகிர்ந்தார்..
''திமுக கூடத்தான் போட்டினு ஏன் சொல்றோம்னா, எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாதுன்னு அண்ணா திமுக காரங்களே நம்புறாங்க. அந்தக் கட்சியின் தொடர்ச்சியான தோல்விகள் மூலம் இந்த உண்மையைப் புரிஞ்சுக்கலாம். அதேபோல வாக்கு வங்கிங்கிறது அடுத்தடுத்த தேர்தல்ல ஒரே மாதிரிதான் இருக்கும்கிறதுக்கும் உத்தரவாதம் கிடையாது. 91 தேர்தல்ல அபரிமிதமான வெற்றி பெற்ற அதிமுக 2001 தேர்தல்ல படு தோல்வி அடைஞ்ச வரலாறு இருக்கு'' என்கிறார்.
காலங்காலமாக நடக்கும் முயற்சி!
அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் அன்பழகன் என்ன சொல்கிறார்?
''எடப்பாடி பழனிசாமி இத்தனை தேர்தல்ல தோத்தார் அத்தனை தேர்தல்ல தோத்தார்னு எடுத்து விடறதெல்லாம் பயத்துல திமுக செய்கிற வேலை. ஒரேயொரு தேர்தல்ல அதாவது 2021ல் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோம். இடைத்தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. ஏன்னா ஆளுங்கட்சியா எது இருக்கொ, அதுதான் இந்த தேர்தல்களில் ஜெயிக்கும்.
2021 தேர்தலிலேயே அறுபதுக்கும் மேலான இடங்களை பிடிச்சிட்டாரேனு எடப்பாடியார் மேல ஒரு காண்டு இன்னைக்கும் திமுக தலைமைக்கு இருக்கு.
விஜய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கார். இதுவரை ஒரு தேர்தலைக் கூட சந்திக்கலை. இந்த நிலையில ஆளுங்கட்சியை எதிர்த்தா நாலு பேரு பார்ப்பாங்க. நம்ம கட்சின்னு ஒண்ணு இருக்குனு தன்னைப் பார்க்க வர்ற கூட்டத்துக்கும் சொல்லணும். அந்தக் கூட்டத்தை ஓட்டா மாத்த முடியும்னு நினைச்சுப் பேசறார். இதனாலெல்லாம் அதிமுக ஓட்டு அவருக்குப் போயிடாது. இரட்டை இலை வாக்குகளை எம்.ஜி.ஆர் இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும்சரி,, வாங்கிடலாம்னு கருணாநிதி என்னென்னவோ பேசிப் பார்த்தார். ஒண்ணும் நடக்கலை. அம்மா மறைந்த போதும் எத்தனையோ பேர் முயற்சி செய்தாங்க.. தேறலை. அந்த வரிசையில் புதுசா வந்திருக்கிற விஜய்யும் முயற்சி செய்கிறார். ரிசல்ட் முன்னாடி கிடைச்சதுதான்ங்கிறதை தேர்தல் ரிசல்ட் வர்ற நாள்ல தெரிஞ்சுக்கலாம்' என்கிறார் அன்பழகன்.
பழ.கருப்பையா
தெளிவில்லாத கூட்டம்!
அதிமுக சார்பில் முன்பு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ரபி பெர்னார்டிடம் கேட்ட போது,
'அதிமுக ஓட்டுகளை தனக்கு மாத்தற ஒரு டெக்னிக்கா இதைப் பார்க்கலாம். அது நடக்கும்னு அவர் நம்பறதால செய்றார். அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் மறந்துடாம நினைவுல வச்சிருந்தா மட்டுமே அந்த அபாயம் நிகழ்ந்திடாமத் தடுக்க முடியும்' என்றார்.
மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையாவிடமும் இது குறித்துக் கேட்டோம்.
''அவரு ஆட்சியில பங்கு தர்றேனு கூடச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்க்குறார். ஒருத்தரும் போக மாட்டேங்குறாங்களே. பேச்சும் திட்டமும் தெளிவானதா இல்லை. அப்படியே தெளிவாப் பேசிட்டாலுமே, அதைக் கேட்கறதுக்கான கூட்டம் கிடையாது அவருக்குக் கூடுகிற கூட்டம். இந்த நிலையில எனக்கும் இன்னாருக்குதான் போட்டினு எந்த தைரியத்துல சொல்றார்னு அவர்கிட்டதான் கேக்கணும்' என்றபடி முடித்துக் கொண்டார் இவர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என வாசகர்களாகிய நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்டில் குறிப்பிடவும்!