பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில், மெட்ரோவின் 3-வது வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரெயிலில் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நிகழ்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயணிகளிடையே அச்சத்தை விதைக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலம் என்பதால், பாரிசில் மெட்ரோ ரெயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் பயணிகளால் நிரம்பி வழியும் சூழலில், இந்த கொடூர சம்பவம் நடந்தது நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று பெண்கள் கடுமையாக காயமடைந்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மெட்ரோ நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலுக்குப் பின்னால் இருந்த நபரை கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு பாரிசில் உள்ள வால்-டி-ஓய்ஸ் பகுதியில் தலைமறைவாக இருந்த 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதுடன், தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம், பாரிசில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை முன்வைத்துள்ளது.