மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி…ஆத்திரமடைந்த கணவன்…விபரீதத்தில் முடிந்த தகராறு!
TV9 Tamil News December 27, 2025 07:48 PM

சென்னை அசோக் நகர் புதூர் 13-ஆவது தெருவில் வசித்து வருபவர் பிரவீன் குமார். இவரது மனைவி வித்யா பாரதி. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். பிரவீன் குமார் ஜெனரேட்டர்கள் பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்தாராம். இந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரவீன் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால், தம்பதி இடையே அவ்வப்போது, தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி

இந்த நிலையில், பிரவீன் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை வித்தியா பாரதி கண்டித்தாராம். இதில், தம்பதி இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வித்யா பாரதியை, பிரவீன் குமார் அடித்து கீழே தள்ளினாராம். இதில், கீழே விழுந்த வித்யா பாரதி பலத்த காயமடைந்து மயங்கினார்.

மேலும் படிக்க: பானிபூரி வாங்கி தருவதாக 5 வயது சிறுவன் கடத்தல்.. பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. கோவையில் பரபரப்பு!!

கீழே தள்ளியதில் உயிரிழந்த பெண்

இதனை பார்த்து அவரது இரு குழந்தைகளும் கதறி அழுதுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து வித்யா பாரதியை மீட்டு கே. கே. நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தலைமறைவாக இருந்த தந்தை கைது

இது குறித்து, அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு தலைமறைவாக இருந்து வந்த பிரவீன் குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில், பிரவீன் குமாரை போலீசார் கைது செய்தனர். அசோக் நகர் பகுதியில் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில், தந்தையும் கைதான நிலையில், அவர்களின் இரு குழந்தைகளும் ஆதரவின்றி விடப்பட்டுள்ளனர்.

ஆதரவின்றி விடப்பட்ட இரு குழந்தைகள்

இதனால், அவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசோக் நகர் பகுதியில் ஏற்பட்ட கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சிவகாசி அருகே பயங்கரம்… இரு சிறுமிகளுக்கு எமனாக மாறிய வீட்டின் சுவர்…கதவில் விளையாடியது குற்றமா!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.