சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே திரண்ட நூற்றுக்கணக்கான பணியாளர்கள், கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறியும், பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
"நாங்கள் இந்த நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்கிறோம், ஆனால் எங்கள் வாழ்க்கை மட்டும் இன்னும் இருளிலேயே உள்ளது. முறையான ஊதியம் இல்லாமல் குடும்பத்தை நடத்தவே சிரமமாக இருக்கிறது. அரசு உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான தீர்வை வழங்க வேண்டும்," எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.