சென்னை: ஹவுஸ் ஓனரிடம் கைவரிசையைக் காட்டிய ஆட்டோ டிரைவர்; தோழியுடன் சிக்கியது எப்படி?
Vikatan December 27, 2025 07:48 PM

சென்னை, நெற்குன்றம், சக்தி நகர், 12-வது தெருவில் கார்த்திகேயன் (40) என்பவர் டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 24.12.2025-ம் தேதி மாலை பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்த போது, வெளிநாட்டு கரன்சிகள் உள்பட மொத்தம் சுமார் 9.33 லட்சம் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கார்த்திகேயன் கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார்

தொடர்ந்து போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கார்த்திகேயனின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தத விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமாரும் (25)அவரின் தோழியான நெற்குன்றத்தைச் சேர்ந்த ஸ்நேகா (21) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 66,000 ரூபாய், 55,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் மீட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில்,

“எங்களிடம் புகாரளித்த கார்த்திகேயனின் வீட்டின் முதல் தளத்தில் ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை கார்த்திக்கேயன் வீட்டின் அருகேயே மறைத்து வைத்து விட்டு வெளியில் சென்றிருக்கிறார். அதை நோட்டமிட்ட நிதிஷ்குமார், வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியிருக்கிறார். பின்னர் அவைகளை தோழி ஸ்நேகாவிடம் கொடுத்திருக்கிறார். சி.சி.டி.வி மூலம் நிதிஷ்குமாரை கண்டறிந்து பணத்தை மீட்டுள்ளோம்" என்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.