திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, வெளிநாட்டில் வேலை செய்து வரும் பீர் முகமது என்பவரது மனைவியிடம் ஆன்லைன் பகுதி நேர வேலை (Part-time job) எனக்கூறி ரூ.14.42 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் அவரிடம் பேசி வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், முதலில் ரூ.2 லட்சம் முதலீடு செய்த நிலையில், அடுத்தடுத்து அதிக லாபம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை ஏற்று மொத்தம் 14 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளாகச் செலுத்தியுள்ளார்.
ஆனால், பணம் செலுத்திய பிறகு சொன்னபடி வருமானம் வராததுடன், அந்த மர்ம நபர்களின் எண்களும் முடக்கப்பட்டதைக் கண்டு தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோசடி கும்பலின் வங்கி கணக்குகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பார்த்து பொதுமக்கள் யாரும் பணத்தைச் செலுத்தி ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.