Mohar Singh Meena கூட்டத்தின் முடிவை வாசித்தார் ஹிம்மத் ராம் சவுத்ரி
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டம் பின்மால் தாலுகாவைச் சேர்ந்த காஜிபுரா கிராமம் குஜராத் எல்லையை ஒட்டியுள்ளது
இங்கு டிசம்பர் 21-ஆம் தேதி, பெண்கள் மற்றும் சிறுமிகள் ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கும் முடிவை பதினைந்து கிராமங்களின் பஞ்சாயத்து எடுத்தது.
இந்த விவகாரம் ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெண்களின் டிஜிட்டல் சுதந்திரம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இருப்பினும், செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, இந்த முன்மொழிவு பெண்களிடமிருந்தே வந்தது என்று கூறிய பஞ்சாயத்து, இரண்டு நாட்களுக்குள் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது.
ஸ்மார்ட்போன் தடை குறித்த முடிவு என்ன?பின்மாலில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஜிபுரா கிராமத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு அருகிலிருந்து, கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் சுஜனா ராம் சவுத்ரியின் வீட்டிற்கு மணல் நிறைந்த குறுகிய பாதை செல்கிறது.
டிசம்பர் 21-ஆம் தேதி சுஜனா ராம் தலைமையில் பதினைந்து கிராமங்களின் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது இந்த வீட்டில்தான்.
சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஹிம்மத் ராம் சவுத்ரி, இந்தக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கும் முடிவை அறிவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இது நாடு முழுவதும் விவாதத்தைத் தூண்டியது.
கூட்டத்தின் முடிவை வாசிக்கும் போது, "கர்லுவின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தேவா ராம் சவுத்ரி, மருமகள்களும் மகள்களும் கேமரா உள்ள ஃபோன்களை வைத்திருக்கக் கூடாது என்று முன்மொழிந்தார். அவர்கள் கேமரா இல்லாத மொபைல் ஃபோன்களை வைத்துக்கொள்ளலாம். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது" என்று பேசினார் ஹிம்மத் ராம் சவுத்ரி.
Mohar Singh Meena காஜிபுரா அரசு பள்ளி
மேலும், "படிக்கும் பெண்கள் தங்கள் படிப்புக்குத் தேவை என்று நினைத்தால் மொபைல் ஃபோன்களை வைத்துக்கொள்ளலாம். இருப்பினும், வீட்டிற்கு வந்த பிறகு, அவர்கள் மொபைல் போனை வெளியே எடுத்துச் செல்ல முடியாது. திருமணத்திற்கோ அல்லது பொது நிகழ்விற்கோ எடுத்துச் செல்ல முடியாது. பக்கத்து வீட்டிற்குக் கூட எடுத்துச் செல்ல முடியாது. பதினான்கு கிராமங்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன" என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்த முடிவு அறிவிக்கப்பட்ட போது அங்கு பெண்கள் யாரும் இருக்கவில்லை.
பிபிசி நியூஸ் ஹிந்தியின் ஒரு குழு இந்த முடிவைப் பற்றி விவாதிக்க ஹிம்மத் ராம் சவுத்ரியின் வீட்டிற்குச் சென்றது. ஆனால், அவர் அங்கு இல்லை.
"எனது மருமகனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதால் நான் வீட்டில் இல்லை" என்று அவர் பிபிசியிடம் தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார்.
ஸ்மார்ட்ஃபோன் தடை குறித்த முடிவைப் பற்றிப் பேசிய அவர், "யாருக்கும் பிடிக்காததால், அது (முடிவு) திரும்பப் பெறப்பட்டது. அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஜனவரி 26 ஆம் தேதி கூட்டத்திற்குப் பிறகு அனைவரும் ஒப்புக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படுவதாக இருந்தது" என்றார்.
"இந்த முன்மொழிவு பெண்களால் வழங்கப்பட்டது. ஏனெனில், பெண்கள் வயல்களில் வேலை செய்கிறார்கள், குழந்தைகள் நாள் முழுவதும் தொலைபேசியில் பிஸியாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.
பெண்கள் சமூக நிகழ்வுகளுக்கு அல்லது வீட்டிற்கு வெளியே ஃபோன்களை எடுத்துச் செல்லத் தடை விதித்தீர்களே என்று நாங்கள் அவரிடம் கூறியபோது, "பெண்கள் படிக்கும் போது ஃபோன் பயன்படுத்துவதைத் நாங்கள் தடுக்கவில்லை. பொது நிகழ்வுகளுக்கும் வீட்டிற்கு வெளியேயும் ஃபோன்களை எடுத்து வந்தால் மற்ற பெண்கள் ஃபோன் வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்கள் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்" என்று அவர் கூறினார்.
அந்தப் பகுதிப் பெண்கள் சொன்னது என்ன?காஜிபுரா கூட்டம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளதால், ஊடக நிறுவனங்கள் மற்றும் யூடியூபர்கள் அங்கு தொடர்ந்து வந்து செல்கின்றனர். சவுத்ரி சமூக உறுப்பினர்கள் தாங்கள் இப்போது அதைப் பற்றிப் பேசிப் பேசி சலிப்படைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுஜனா ராம் தலைமை வகித்த அந்தக் கூட்டம் குறித்துப் பேச நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவரும் அங்கில்லை. தான் உதய்பூருக்குச் சென்றுள்ளதாக அவர் பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
Mohar Singh Meena தரியா தேவி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்
சுஜனா ராமின் சகோதரர் கர்மி ராம் சவுத்ரி, "இந்த முன்மொழிவைத் திரும்பப் பெற எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை" என்று கூறுகிறார்.
சுஜனா ராம் குடும்பத்தைச் சேர்ந்த தரியா தேவி என்ற பெண் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
"சிறிய ஃபோன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியது பெண்கள்தான். அதனால்தான் கூட்டத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டால் ஜனவரி 26-ஆம் தேதி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இல்லையெனில், இந்த முன்மொழிவு திரும்பப் பெறப்படும். சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரிதாகிவிட்டதால், அது திரும்பப் பெறப்பட்டது" என்றார்.
தரியா தேவி வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்
இதுபற்றிப் பேசிய தரியா தேவி, "பல ஊடகவியலாளர்கள் வந்து நாங்கள் பதிலளித்து சலித்துப் போய்விட்டோம். இது ஒரு சிறிய விஷயம். ஆனால், இது ஒரு பெரிய பிரச்னையாகிவிட்டது. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. ஆனால், அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் எங்களிடம் சொன்னதில்லை" என்றார்.
Mohar Singh Meena கர்லு கிராமத்தை சேர்ந்த அஞ்சா தேவி
காஜிபுரா கிராமத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் கர்லு கிராமம் உள்ளது. அங்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தேவாராம் சவுத்ரியின் வீடு உள்ளது. ஆனால், அவர் வெளியே சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சா தேவி கூறுகையில், "குழந்தைகள் எல்லா நேரமும் ஃபோனைப் பயன்படுத்துகிறார்கள். சாப்பிட மாட்டார்கள், எங்கள் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அதனால்தான் ஃபோனை அணைக்க வேண்டும் என்று முன்மொழிந்தோம்" என்றார்.
இந்த முழு சர்ச்சையிலும், பலரும் இப்போது பெண்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவது குறித்த தடையைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள்.
ஹனுமன்கரில் உள்ள அரசு கல்லூரியில் சமூகவியலாளராக இருக்கும் டாக்டர் அர்ச்சனா கோதாரா கூறுகையில், 'இந்த பகுதியில் கல்வி அறிவு இல்லாததாலும், தங்கள் சுற்றுச்சூழலுக்கு அப்பால் சிந்திக்க முடியாததாலும், கிராமப்புறப் பெண்கள் பொதுவாகத் தங்களுக்காகக் குரல் கொடுக்கத் தயங்குகிறார்கள்' என்றார்.
"ஃபோன்களைப் பயன்படுத்துவது இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது என்ற மனநிலை சமூகத்தில் உள்ளது. இந்த மனநிலையால் பெண்கள் ஃபோன் பயன்படுத்துவதைத் தடுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்றும் அவர் கூறுகிறார்.
Mohar Singh Meena பொய்ப் பிரசாரக் குற்றச்சாட்டுகள்
இந்த விவகாரம் குறித்த சமூக ஊடக உரையாடல்கள் குறித்து அப்பகுதிவாசிகள் அறிந்திருக்கிறார்கள்.
அதே கிராமத்தைச் சேர்ந்த நாதா சிங் என்பவரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவரும் அங்கில்லை.
அவரது சகோதரர் அஜ்பா ராம் சவுத்ரி, தங்கள் தாயார் உடல்நிலை சரியில்லாததால், நாதா சிங் மருந்து வாங்கச் சென்றதாகக் கூறினார்.
ஒரு சிறிய விஷயம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர். "எனது மருமகள் ஜோத்பூரில் ஆர்பிஎஸ்சி (RPSC) தேர்வுக்காகத் தயாராகி வருகிறார். நானே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு ஆப்பிள் ஃபோனை வாங்கிக் கொடுத்தேன். படிக்கும் பெண்களின் பெரும்பாலான வேலைகள் ஃபோனில் இருக்கும்போது, நாங்கள் ஏன் அவர்கள் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப் போகிறோம்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த முழு விவகாரமும் நாடு முழுவதும் உள்ள பெண்களின் டிஜிட்டல் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
அந்த ஊரைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு முதியவர், "பெண்கள் மட்டுமே ஃபோன் பயன்படுத்துவதைத் தடை செய்வது எந்த அளவிற்குச் சரியானது? ஃபோன்களை தடை செய்வதாக இருந்தால், அனைவருக்கும் செய்யுங்கள். இல்லையெனில் யாருக்கும் வேண்டாம்" என்கிறார்.
இதற்கிடையில், காஜிபுரா மற்றும் கர்லு கிராமங்களுக்கு இடையே உள்ள மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் குழுவில் அமர்ந்திருந்த ஒருவர், "இந்த முடிவு ஃபோன் பயன்பாட்டை நிறுத்தியிருக்குமானால், நாங்களும் எங்கள் சமூகத்தில் இதேபோன்ற முறையில் ஃபோன்களைத் தடை செய்வதைப் பற்றி நிச்சயமாக யோசித்திருப்போம்" என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு