மலேசியாவில் ஒலித்த 'அஜித்' பெயர் – ஒப்புக் கொண்ட தளபதி விஜய்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
Seithipunal Tamil December 29, 2025 05:48 PM

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாகவும், ரசிகர்களின் பேராரவாரத்துடனும் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய உரை, பாடிய பாடல், நடனமாடிய தருணங்கள், குட்டி கதை என ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது என்ற செய்தி வெளியான நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி பரபரப்பாக பேசப்பட்டது. “நடிகர் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பாரா?” என்பதே அது. காரணம், அஜித்தின் கார் ரேஸ் அணியும் தற்போது மலேசியாவில்தான் முகாமிட்டுள்ளது. இதனால், விஜய் – அஜித் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, அஜித் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. இருந்தாலும், விழா மேடையில் விஜய் பேசிய உரையில், அஜித்தின் பெயரும் அவரது புகழ்பெற்ற ‘பில்லா’ படத்தின் பெயரும் இடம்பெற்றது. இதுவே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

விஜய் பேசும்போது,“சில படங்களின் பெயரை சொன்னாலே மலேசியா தான் நியாபகத்துக்கு வரும். அப்படி நமது நண்பர் அஜித்தின் ‘பில்லா’ படத்தை சொல்லலாம்” என்று குறிப்பிட்டார்.விஜய் இந்த வார்த்தைகளை சொன்ன உடனே, அரங்கம் முழுவதும் கைதட்டலும், விசில்களும், ஆரவாரமும் வெடித்தது.

ஏற்கனவே விஜய் மலேசியாவுக்கு சென்றதிலிருந்து, சமூக வலைதளங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும், “மொத்த மலேசியாவும் அவருடையது” என்ற டயலாக் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அந்த சூழலில் விஜயின் இந்த குறிப்பும், ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அஜித் நடித்த ‘பில்லா’ படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில், அந்த படம் 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதும் நினைவுகூரப்பட்டது.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில், அஜித்தை நினைவூட்டும் இன்னொரு தருணமும் இடம்பெற்றது. ‘ஜன நாயகன்’ படத்தின் இயக்குநர் ஹெச். வினோத், அஜித்தை வைத்து இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய மூன்று படங்களின் பெயர்கள், மேடையில் திரையிடப்பட்ட ஒரு சிறப்பு வீடியோவில் காட்டப்பட்டன. அதோடு, ஹெச். வினோத் முன்னதாக இயக்கிய மற்ற ஐந்து படங்களின் பெயர்களும் அந்த ஏ.வி-யில் இடம்பெற்றிருந்தது.

மொத்தத்தில், அஜித் நேரில் வராத போதிலும், விஜய் மேடையில் அஜித்தை நினைவுகூர்ந்த விதம், ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது. போட்டிகளுக்கும் அப்பாற்பட்ட நட்பு, மரியாதை மற்றும் பரஸ்பர அங்கீகாரம் தான் இந்த தருணத்தின் மையமாக அமைந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.