“யாரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்று பேசுகிறார்கள். கொஞ்ச நாள் சஸ்பென்ஸிலேயே இருங்கள். ஜனவரிக்கு பிறகு தவெக பற்றி தெரியும்” என்று நடிகர் விஜய் சமீபத்தில் பேசிய வார்த்தைகள், தற்போது தமிழக அரசியல் களத்தில் உண்மையாகும் நிலைக்கு வந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தவெக பக்கம் சாயக்கூடும் என்ற தகவல்கள், அதிமுக மற்றும் பாஜக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளன.
அரசியல் பார்வையாளர்கள் கூறுவதுபோல், இந்த கூட்டணி உருவானால் அது திமுகவுக்கு சாதகமாக அமையக்கூடும். ஆட்சிக்கு எதிரான வாக்குகளை விஜய் பிரிப்பதோடு, அதிமுக–பாஜக ஆதரவு வாக்குகளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் வழியாக தவெக பக்கம் திருப்பும் சூழல் உருவாகலாம். இதனால், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி சிதறி, திமுகவுக்கு அரசியல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் அளித்த சமீபத்திய கருத்துகள், தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுந்தபோது, டிடிவி தினகரன், “ஒரு புதிய கட்சி எங்களுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது. பொங்கலுக்குள் முடிவு தெரியும்” என்று கூறியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி அமைந்ததால், அமமுக தனியாக போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவும், ஓபிஎஸ் தரப்பும் இணைந்திருந்தன. ஆனால், தற்போது மீண்டும் அதிமுக–பாஜக கூட்டணி உறுதியான நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு அந்த அணியில் முக்கியத்துவம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினர்.
இந்தச் சூழலில், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அவரது ஆலோசனை கூட்டத்தில், “திமுக கூட்டணியா அல்லது தவெக கூட்டணியா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் தவெக கூட்டணியை ஆதரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸும் “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று கூறி, தவெக பக்கம் ஆதரவான சிக்னலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல், டிடிவி தினகரனும் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்பே கூறியிருந்தார். இப்போது ஜனவரி மாதத்தில் கூட்டணி விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது, தவெக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த இரு தலைவர்களும் ஒன்றாக தவெக பக்கம் நகர்ந்தால், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக–பாஜக கூட்டணிக்கு கடும் சவால் உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தரப்பில் இதுவரை நேரடி பேச்சுவார்த்தை நடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இருப்பினும், மறைமுக பேச்சுகள் நடந்திருக்கலாம் என்றும், விஜய் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனால், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தவெக தலைமையில் உருவாகும் கூட்டணி யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு என்பதே இனி தமிழக அரசியலின் மைய விவாதமாக மாறியுள்ளது.