தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜயை வெளிப்படையாக பாராட்டி பேசுவது, ஆளும் திமுக தரப்பில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு தவெக ஆதரவு போக்கு காட்டப்படுவது, திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் வெளிப்பாடாக, திமுக தலைமை கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் ஹபீசுல்லா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “கூட்டணி என்பது mutual respect, mutual benefit அடிப்படையிலானது. கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கருத்து கூறுவது party discipline-க்கும் alliance discipline-க்கும் எதிரானது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெயர் குறிப்பிடாமல் காங்கிரஸை சுட்டிக்காட்டியுள்ள இந்த பதிவு, திமுக–காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சமீப காலமாக காங்கிரஸ் நடவடிக்கைகளில் திருப்தியில்லை என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கேட்ட அதிக இடங்களையும், அதேபோல் தவெக-வுடன் நெருக்கம் காட்டி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காததையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டதும், பின்னர் விஜயுடன் நேரில் சந்தித்து அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியதும் திமுக தரப்பில் கோபத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்காமல் காங்கிரஸ் தலைமை மௌனம் காத்தது, திமுகவை மேலும் அப்செட் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தியின் நெருங்கியவராக கருதப்படும் நிலையில், ஸ்டாலினை தனியாக சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இம்முறை சுமார் 70 தொகுதிகள் வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றால் மாநில அமைச்சரவையில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும், எந்த உறுதியும் அளிக்காமல், திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அமைந்த பிறகே பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் கூறினாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு, தவெக தொடர்பான காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை ஆகியவை திமுக–காங்கிரஸ் உறவில் மறைமுக பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதனால் வரும் நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மேலும் தீவிரமான பேரம்பேசல்களாக மாறலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.