சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். “அன்புமணிக்கு கிடைத்த எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் ஐயா (ராமதாஸ்) போட்ட பிச்சை; பாமகவை களவாடிவிட்டு உரிமையை மீட்கப் போகிறேன் என அன்புமணி கூறுவது கேலிக்கூத்து” என்று விளாசினார்.
“ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்” என்று குறிப்பிட்ட அவர், ஐயாவை நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றது பச்சைத் துரோகம் என்றும், ஜி.கே.மணி போன்றவர்களை அடிமைகள் எனக் கூறும் அன்புமணியே ஆர்.எஸ்.எஸ்-ன் அடிமை என்றும் பகிரங்கமாகச் சாடினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிரடி வியூகத்தை டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வகுத்துவிட்டதாக ஸ்ரீகாந்தி தெரிவித்தார். “யாருடன் கூட்டணி, யாருக்கு சீட் என்பது ஐயாவுக்குத் தெரியும்; வரும் தேர்தலில் 25 எம்.எல்.ஏ-க்களுடன் பாமக சட்டப்பேரவைக்குள் செல்லும், கண்டிப்பாக ஆட்சியில் பங்கு பெறுவோம்” என்று அவர் அதிரடியாக முழங்கினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ராமதாஸ் தரப்பு, ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும், இனிமேல்தான் ஐயாவின் உண்மையான அரசியல் ஆட்டத்தை அனைவரும் பார்ப்பார்கள் என்றும் ஸ்ரீகாந்தி பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.