எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் செயல்பட்டு வந்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பலமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் இவர் அதிமுக அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு கணிசமான வாக்குகளை பெற்று தந்து அக்கட்சியி வெற்றி பெறவைப்பவர் செங்கோட்டையன். ஆனால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செங்கோட்டையன் பேச தொடங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்பின் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் செங்கோட்டையன். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அடுத்துள்ள சிவன் மலையில் புதிதாக கட்டப்பட்ட தவெக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக செங்கோட்டையன் இன்று அங்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் அவரை முற்றுகையிட்டு ‘10 ஆண்டுகளாக நாங்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தவெகவில் பொறுப்பு வழங்கப்படவில்லை’ என்று செங்கோட்டையனிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், இளைஞர் அணி பதவிகளை பெற்றுத் தரும்படி பதாதைகளை ஏந்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விரைவில் இது தொடர்பாக தலைமையிடம் விவாதித்து சுமூகமான முடிவு எட்டப்படும் என சொல்லி அவர்களை சமாதானம் செய்து செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.