மதுரையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உயிரிழந்த பூர்ண சந்திரனின் 16-ஆம் நாள் துக்க அனுசரிப்பு நடந்தது. இதில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துக்க அனுசரிப்புக்கு பின்னர், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
முருகனுக்காக பூர்ண சந்திரன் தன் உடலையே தீபமாக எரித்துள்ளார். அவரது குடும்பத்தினர் தி.மு.க.,வினர். ஆனால், தி.மு.க., சார்பில் யாரும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. கடவுள் இல்லை என்று கூறிய, ஈ.வெ.ரா., சிலை முன்பு உயிரை தியாகம் செய்துள்ளார். அவரது தியாகம் வீண் போகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அப்படி ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும், முருக பக்தர்களும் சேர்ந்து மலையில் தீபம் ஏற்றுவோம் என்று கூறியுள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூ., எம்.பி., வெங்கடேசன் ஆகிய இருவரும் நக்சலைட் சிந்தனை கொண்டவர்கள் என்றும் விமர்சித்துள்ளார். கோவில்கள், ஹிந்து கடவுள்கள், ஹிந்து பெண்கள் குறித்து அவதுாறு பேசிய திருமாவளவன், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை பற்றி பேசுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தி.மு.க., - எம்.பி., கனிமொழி தீபத்துாணை அளவைக்கல் எனக்கூறி முருக பக்தர்களை கொச்சைப்படுத்துகிறார் என்றும் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.