இங்கிலாந்து நாட்டின் பொதுச் சாலைகளில் இந்தியர்கள் சிலர் குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, ஆங்காங்கே எச்சில் துப்பியுள்ள அவலம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அழகான மற்றும் தூய்மையான இங்கிலாந்து வீதிகளில் சிவப்பாகப் படிந்துள்ள பாக்குக் கறைகளை ஒருவர் சுட்டிக்காட்டி வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “குட்கா-பான் மசாலா என்பது சாலைகளுக்கு வந்த ஒரு பெரும் தொற்று” என்று அங்கிருப்பவர்கள் இந்தியர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பலரும், இத்தகைய ஆரோக்கியமற்ற மற்றும் அசுத்தமான பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகர்களைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். நாட்டின் புகழைச் சர்வதேச அளவில் சிதைக்கும் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை எனச் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் பழக்கம், இப்போது வெளிநாடுகளிலும் இந்தியாவின் பிம்பத்தை அசுத்தப்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.