21 நாட்களில் 06 இந்துக்கள் கொலை; வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியம்..!
Seithipunal Tamil January 07, 2026 09:48 PM

வங்கதேசத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் ஆறு இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் அடுத்த மாதம், பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு சிறுபான்மையினரான ஹிந்து மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஐந்து இந்து இளைஞர்கள் வன்முறை கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, அந்நாட்டின், மைமன்சிங் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் பஜேந்திர பிஸ்வாஸ் என்ற ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 21 நாட்களில் மட்டும் வங்கதேசத்தில் 06 ஹிந்துக்கள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் சிறுபான்மையினர் இடையே பெரும் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட 06 இந்துக்கள்..!

01. டிசம்பர் 18-ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில், இந்தியாவை சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

02. டிசம்பர் 24-இல் அம்ரித் மண்டல் என்ற ஹிந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

03. டிசம்பர் 31-இல் கோகன் சந்திர தாஸ் என்பவரை வழிமறித்த கும்பல், பெட்ரோல் ஊற்றி எரித்தது. மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய அவர் ஜனவரி 03-ஆம் தேதி இறந்தார்.

04. ஜனவரி 05-ஆம் தேதி, ரண பிரதாப் பைராகி என்கிற பத்திரிக்கையாளர் பொது இடத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

05. அதே நாளில் நரசிங்கடி மாவட்டத்தில் மளிகை கடை நடத்தி வந்த சரத் சக்ரவர்த்தி மணி என்பவர் வெட்டி கொல்லப்பட்டார்.

06. இன்று ஜனவரி 06-இல் மைமன்சிங் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் பஜேந்திர பிஸ்வாஸ் என்ற ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அத்துடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.