`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?
Vikatan January 09, 2026 04:48 AM

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார்.

வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையையும் வேதாந்தா நிறுவனம் நடத்தி வந்தது.

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால். அவருக்கு வயது 49. அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது, விபத்தில் சிக்கி நியூயார்க்கில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு அக்னிவேஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...

தன்னுடைய மகனின் இறப்பைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்பு மகன் அக்னிவேஷ் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். 49 வயதுதான் ஆகிறது. திடீர் மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது.

பெற்றோருக்கு, தங்கள் சொந்தக் குழந்தையின் மரணத்தால் ஏற்படும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மகன் ஒரு தந்தைக்கு முன்பு உலகை விட்டுச் செல்லக் கூடாது. இந்த இழப்பு எங்களை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உடைத்துவிட்டது" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மோடி இரங்கல்

மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், "அக்னிவேஷ் அகர்வால் அவர்கள் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அளிக்கிறது. அனில் அகர்வாலின் துயரத்தின் ஆழம் தெளிவாக வெளிப்படுகிறது. உங்கள் குடும்பம் இந்த கடினமான நேரத்தில் தொடர்ந்து வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்

அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால். 1976 ஜூன் 3ஆம் தேதி பாட்னாவில் பிறந்த இவர், அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற மயோ கல்லூரியில் கல்வி பயின்றிருக்கிறார்.

மேற்படிப்பிற்காக பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்காவில் தனது கல்வியை முடித்த பின், தந்தையின் நிறுவனத்தில் உடனடியாக இணையாமல் உலகளாவிய வணிக முறை, நிதி மேலாண்மை மற்றும் கார்ப்பரேட் நிர்வாகம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணிபுரிந்து தொழில்முறை அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

அக்னிவேஷ் அகர்வால்

இந்த அனுபவமே பின்னர் இந்தியாவுக்குத் திரும்பிய அக்னிவேஷ் அகர்வாலுக்கு வேதாந்தா குழும நிறுவனங்களில் பணியாற்ற பெரிதும் உதவி இருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.