தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு குடிநீர் வழங்கல் திட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்று 1,020 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 888 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசின் கடந்த கால ஆட்சியில் நீர்வளத்துறை, மீன்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
அமைச்சர்கள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களைப் பட்டியலிட்ட அவர், மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டியவர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்ய நினைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.