தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் ஒரு பெண் உதவிப் பேராசிரியரை தவறாகச் சித்தரித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில், அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவிப் பேராசிரியர்களான திருமால் ராஜா மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் இணைந்து, துணைவேந்தரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு புத்தகத்தை அச்சிட்டுள்ளனர். இந்த புத்தகத்தை பல்கலைக்கழகத்தில் உள்ள சக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தபால் மூலம் விநியோகித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தபால் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் தபால் மூலம் புத்தகங்களை அனுப்புவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், இருவரும் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களே இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
Edited by Siva