பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தலைமைப் போட்டி நிலவி வரும் சூழலில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு வழங்கும் பணியை ராமதாஸ் தொடங்கிவைத்தார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதாக அன்புமணி அறிவித்ததை நிராகரித்த ராமதாஸ், “பாமக நிறுவனர் நான்தான், என் முடிவே செல்லும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, ராமதாஸின் மகளும் கட்சியின் செயல் தலைவருமான காந்திமதி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
ராமதாஸ் தலைமையிலான அணிதான் உண்மையான பாமக என்றும் அவர் உறுதியாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக ஆட்சி நன்றாக இருப்பதாகத் தெரிவித்ததோடு, திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று சூசகமாகப் பதிலளித்தார்.
இதன் மூலம் அவர் திமுக கூட்டணியை நோக்கி நகர்வது போன்ற அறிகுறி தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாமகவில் தந்தை ஒரு முடிவும், மகன் ஒரு முடிவும் எடுத்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.