“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பார்கள். பாகிஸ்தானின் மோசமான பொருளாதாரச் சூழலையும், ஒரு மனிதனின் பசி கொடுமையையும் விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
ஒரு சிறிய கடைக்குள் நுழையும் நபர், அங்குள்ள செல்போன்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைத் திருட நினைக்கவில்லை. கடைக்காரர் உள்ளே சென்ற நேரத்தில், அவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த தட்டில் இருந்து ஒரே ஒரு ரொட்டித் துண்டை (Roti) மட்டும் எடுத்துத் தனது பையில் ஒளித்து வைத்தார்.
சந்தேகமடைந்த கடைக்காரர் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி, கோபத்தில் கன்னத்தில் அறைந்து சோதனையிட்டார். பையிலிருந்து வெறும் ரொட்டித் துண்டு மட்டும் வெளிவந்ததைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தான் திருடியது பசிக்காகத்தான் என்பதை அந்த நபர் கண்கலங்கியபடி சைகையில் உணர்த்திய போது, அடித்த கடைக்காரரே மனம் உடைந்து போனார்.
மன்னிப்புக் கேட்டு அந்த ரொட்டியை அவரிடமே கொடுக்க முன்வந்தார். ஆனால், அவமானத்தால் அந்த நபர் அதனை வாங்க மறுத்து அழுதுகொண்டே வெளியேறினார்.
“விலையுயர்ந்த பொருட்களை விட வயிறு தான் முக்கியம்” என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, பார்ப்பவர் எவரையும் ஒரு நிமிடம் கண் கலங்க வைத்துள்ளது.