நள்ளிரவு நேரத்தில் எலி மருந்து ஆர்டர் செய்த பெண்ணின் மனநிலையை அறிந்து, அவருக்கு உரிய அறிவுரை கூறி தற்கொலை முயற்சியைத் தடுத்த பிளிங்கிட் (Blinkit) டெலிவரி ஊழியரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பிளிங்கிட் நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவருக்கு, நள்ளிரவு நேரத்தில் ஒரு ஆர்டர் வந்தது. அதில் மூன்று பாக்கெட் எலி மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. வழக்கமான ஒரு டெலிவரி தானே என்று கிளம்பிய அந்த ஊழியருக்கு, அந்த அகால நேரத்தில் எலி மருந்து ஆர்டர் செய்யப்பட்டது ஏதோ ஒரு தவற்றை உணர்த்தியது. குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அங்கிருந்த பெண் மிகுந்த மனவேதனையுடன் அழுதுகொண்டே கதவைத் திறந்துள்ளார். இதைக் கண்ட டெலிவரி ஊழியர், அந்தப் பெண் ஏதோ தவறான முடிவை எடுக்கப் போகிறார் என்பதைத் தனது உள்ளுணர்வால் உணர்ந்தார்.
அவரிடம் கனிவாகப் பேச்சு கொடுத்த ஊழியர், “உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்காதீர்கள். உங்கள் உயிர் விலைமதிப்பற்றது” என்று ஆறுதல் கூறியுள்ளார். ஆர்டர் செய்த பெண் அதனை மறுத்த போதிலும், “எலி தொல்லை இருந்தால் மாலை நேரத்திலேயே வாங்கியிருக்கலாம், நள்ளிரவில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்று கூறி, அந்த ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து ரத்து செய்தார். வாங்கிய விஷப் பாக்கெட்டுகளைத் திரும்ப எடுத்துச் சென்ற அவர், ஒரு உயிரைக் காப்பாற்றிய திருப்தியுடன் அங்கிருந்து திரும்பினார்.
View this post on Instagram
இந்தச் சம்பவம் குறித்து அந்த ஊழியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், “இன்று நான் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டதாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. “ஒருவேளை இயந்திர மனிதனோ (Robot) அல்லது ட்ரோனோ டெலிவரி செய்திருந்தால் இன்று ஒரு உயிர் போயிருக்கும். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையே இந்தச் செயல் காட்டுகிறது” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த டெலிவரி ஊழியரை பிளிங்கிட் நிறுவனம் முறையாகக் கௌரவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.