''ஜனநாயகன்- னே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்; மற்றவர்கள் எல்லாம் பதறி, என்ன கதறி என்ன ஆகப்போகிறது?" பெ.சண்முகம் தாக்கு..!
Seithipunal Tamil January 09, 2026 11:48 AM

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 09-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை (ஜனவரி 09 ஆம் தேதி) ஒத்திவைத்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

பல நடிகர்களும் இது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸும் இந்த விவகாரத்தில் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் தணிக்கை வாரியத்தின் செயல் குறித்து சம்பந்தப்பட்ட ஜனநாயகன்- னே வாய்மூடி மௌனியாக இருக்கிறார். வாரியத்தை குறை சொன்னால் ஒன்றிய பாஜக அரசை குறை சொன்னதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை, தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என்றுதான் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் பதறி, என்ன கதறி என்ன ஆகப்போகிறது?" எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.