பீகார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி. தியாகி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சமூக நீதிக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல தசாப்தங்களாகத் தொய்வின்றி உழைத்து வரும் நிதிஷ் குமார், சோசலிச இயக்கத்தின் ‘விலைமதிப்பற்ற ரத்தினம்’ ஆவார்.
பீகாரில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் நல்லாட்சிக்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்த அவர், இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற முழுத் தகுதி படைத்தவர். ஏற்கனவே பல தலைவர்களுக்கு அவர்கள் வாழ்நாளின் போதே இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை ஏற்று நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.”