சமூக வலைதளங்களில் ஒரு தனியார் நிகழ்ச்சியின் காணொளி, பார்ப்பவர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையற்ற கணவன்-மனைவி தங்களது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே பார்வை இல்லாத காரணத்தால், பிற்காலத்தில் அவர் சிரமப்படக்கூடாது என்ற நோக்கில் அவரது குடும்பத்தினர் கர்ப்பப்பையை அகற்றியுள்ளனர். ஒரு பெண்ணின் வாழ்வில் தாய்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் சூழலில், இந்த உண்மை தெரிந்தும் அந்தப் பெண்ணைக் காதலித்து கரம் பிடித்துள்ளார் அவரது கணவர்.
அவரால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும், அவங்க எனக்குக் குழந்தை, அவங்களுக்கு நானே குழந்தை” என்று அந்தப் பார்வையற்ற கணவர் பெருமிதத்துடன் கூறிய வார்த்தைகள் அங்கிருந்தவர்களையும் நெட்டிசன்களையும் உருக வைத்துள்ளது. உடல் ஊனத்தையும் தாண்டி, ஒருவரை மனதார நேசிப்பதும், குறைகளைத் தாண்டி ஒரு பெண்ணுக்கு வாழ்வளிப்பதும் தான் உண்மையான காதல் என்பதற்கு இந்தத் தம்பதியர் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். இந்தக் காணொளியைப் பகிரும் மக்கள், “இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கண்களாகவும், உலகமாகவும் வாழ்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி வருகின்றனர்.