சமூக வலைதளங்களில் ஒரு இளைஞரின் கடின உழைப்பும் வெற்றியும் கலந்த கதை தற்போது பலரையும் உருக வைத்துள்ளது. அந்த இளைஞர் தான் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் என்றும், தான் இந்த இடத்திற்கு வர மூன்று ஆண்டுகள் நீட் (NEET) தேர்வுக்குத் தயாரானதாகவும் பெருமிதத்துடன் பகிர்கிறார். தனது முதல் முயற்சியின் போது பயிற்சி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவானதாகவும், அந்த முறை வெற்றி பெற முடியாததால், மீண்டும் தனது பெற்றோருக்குப் பணச் சுமையை கொடுக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் எடுத்த முடிவுதான் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், அவரே ‘காட்டு வேலைக்கு’ (கூலி வேலை) சென்று, அங்கு வேலைக்கு நடுவே கிடைக்கும் நேரங்களில் எல்லாம் புத்தகத்தை எடுத்து வைத்துத் தீவிரமாகப் படித்து வந்துள்ளார். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது அவர் தனது லட்சியமான மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். தனது வறுமையையும் கஷ்டத்தையும் ஒரு தடையாக நினைக்காமல், உழைப்பால் வென்ற இந்த இளைஞனின் அனுபவம் இப்போது இணையம் முழுவதும் வைரலாகி பலருக்குப் பாடமாக அமைந்துள்ளது.