மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், வருகிற 15-ந்தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மேயர் வேட்பாளரை ஆதரித்து பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பிரசாரம் செய்து வருகிறார். அண்ணாமலை பிரசாரத்தின் போது, மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை எனக் கூறியதாக கூறி, சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: அண்ணாமலை பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர். இது பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? எனத் தெரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராக இங்கே (மும்பையில்) வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதோடு, அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் பட்நாவிஸ் இதில் தெளிவான நிலை எடுக்க வேண்டும் எனவும், துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டேயின் சுயமரியாதை எங்கே..? நீங்கள் எவ்வளவு கையாலாகாதவர்..? என்று சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, அந்தக் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம், அதனால் அவர் சரியாக என்ன சொல்ல வந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சஞ்சய் ராவத்-க்கு பதிலளித்துள்ளார்.
அதாவது, அண்ணாமலை பிரசாரத்தின்போது "மத்தியில் மோடி ஜி, மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் ஜி, மும்பை மாநகராட்சியில் பாஜக மேயர். ஏனென்றால்... மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை. அது சர்வதேச நகரம்" எனப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.