அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கல்லறையிலிருந்து சுமார் 100 மனித எலும்புக்கூடுகளைத் திருடிய ஜொனாதன் கெர்லாக் (34) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய கைவிடப்பட்ட கல்லறைகளில் ஒன்றான ‘மவுண்ட் மோரியா’ கல்லறையில் கடந்த சில வாரங்களாக இந்தத் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.
மேலும் போலீஸார் நடத்திய சோதனையில், கெர்லாக்கின் வீடு மற்றும் அவர் பயன்படுத்திய கிடங்கில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள், மம்மியாக்கப்பட்ட கை, கால்கள் மற்றும் அழுகிய நிலையில் இருந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடல்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டும், சில பாகங்கள் கோர்க்கப்பட்டும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்லறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த கெர்லாக்கை போலீஸார் மடக்கிப் பிடித்தபோது, அவரிடம் கடப்பாரை மற்றும் சிறு குழந்தைகளின் மம்மியாக்கப்பட்ட உடல் பாகங்கள் அடங்கிய பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லறையில் முறையான பாதுகாப்பு இல்லாததைப் பயன்படுத்தி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பிணத்தை அவமதித்தல் மற்றும் திருட்டு உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், எதற்காக அவர் இந்த எலும்புக்கூடுகளைச் சேகரித்தார் என்பதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.