ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல்வேறு மாகாணங்களில் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சுமார் 2,600 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பலர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், கைது செய்யப்பட்டவர்கள் ‘கடவுளின் எதிரிகளாக’ கருதப்படுவார்கள் என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய சட்டப்படி, இறைவனுக்கு எதிராகப் போர் தொடுப்பதாகக் கருதப்படும் இக்குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவித கருணையும் காட்டக் கூடாது என்று வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கைதான 2,600 பேரின் உயிர் குறித்த அச்சமும் சர்வதேச அளவில் கவலையும் அதிகரித்துள்ளது.