காங்கிரஸ் கட்சி தற்போது மக்களால் விரும்பப்படாத ஒரு கட்சியாக மாறிவிட்டதாகத் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் சிக்கியிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் திட்டங்களுக்குச் சோனியா காந்தியின் குடும்பப் பெயரை மட்டுமே சூட்டுவதாகவும், ஆனால் பிரதமர் மோடி அனைத்துத் திட்டங்களையும் பொதுவான பெயர்களிலேயே அறிவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் நாட்டுக்காக உழைத்த பல தலைவர்களின் பெயர்களைச் சூட்டாமல் ஒரு குடும்பத்தின் பெயரையே முன்னிறுத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார். தி.மு.க அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த குஷ்பு, தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டுவது போலத் தி.மு.க பாசாங்கு செய்வதாகக் கூறினார்.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்லத் தன் செல்வாக்கை இழந்து கரைந்து வரும் கட்சியாக மாறிவிட்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.