ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2020-ல் ஒரு தம்பதிக்குத் திருமணம் நடந்தது. ஒருநாள் மனைவி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, கணவன் அவருக்குத் தெரியாமல் அவர் செல்போனை எடுத்து நோண்டியுள்ளார். அதில் மனைவி பழைய நினைவாகச் சேமித்து வைத்திருந்த சில தனிப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த அந்த நபர், அதைத் திருடி வைத்துக் கொண்டார். அதோடு நில்லாமல், “இந்த போட்டோவை எல்லாருக்கும் காட்டிவிடுவேன், இன்டர்நெட்டில் போட்டுவிடுவேன்” என்று சொல்லி மனைவியைத் தொடர்ந்து மிரட்டி சித்திரவதை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், இந்த நபர் கூட இனி வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கணவனுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது. “மனைவிக்குத் தெரியாமல் அவர் போனைத் தொடுவதே தப்பு. அதுவும் அந்தப் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது அந்தப் பெண்ணின் மானத்தையே வாங்குவதற்குச் சமம். இது மிகப்பெரிய மன ரீதியான கொடுமை” என்று நீதிபதிகள் கோபமாகச் சொன்னார்கள். முதலில் விவாகரத்து கொடுக்க மறுத்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், அந்தப் பெண்ணுக்கு இப்போது விவாகரத்து கொடுத்துத் தீர்ப்பளித்துள்ளனர்.