தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாழ்த்து பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
வரும் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்படும் நிலையில், “அமமுக ஆதரவின்றி எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது” என்று டிடிவி தினகரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் இயக்கத்திற்கு எது நல்லதோ, அந்த முடிவையே எடுப்போம் என்றும், எந்தக் கூட்டணியில் சேருவது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அமமுகவுக்கே என்றும் அவர் கூறி வருகிறார். மேலும், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும், ஆண்டிபட்டி தொகுதி எங்களுக்கு புனித பூமி; எந்தக் கூட்டணியிலும் இருந்தாலும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், அதிமுக–பாஜக கூட்டணியில் அமமுக இணையக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் உலவி வருகின்றன. ஆனால், அமமுகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. மறுபுறம், தவெக உடனும் அமமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தவெக உடன் பேசி வருவதாக செங்கோட்டையன் முன்னதாக கூறியிருந்தது கவனம் பெற்றது.
அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், மதம், ஜாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், அமமுக வேறு திசையில் கூட்டணி முடிவு எடுக்கக்கூடுமோ என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டிடிவி தினகரன் நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக–பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சில தொகுதிகள் அமமுகவுக்கு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதுபோல், டிடிவி தினகரனின் சமீபத்திய எக்ஸ் (X) பதிவு அமைந்துள்ளது.
செங்கோட்டையனின் பிறந்தநாளை முன்னிட்டு, “எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர்ந்து செய்ய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து, தவெக–அமமுக இடையிலான உறவு மேலும் நெருக்கமாகுமா, அல்லது எதிர்வரும் நாட்களில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகுமா என்ற கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்பி, பரபரப்பை அதிகரித்துள்ளது.