மாநிலம் முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 2- திங்கட்கிழமை) முதல் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8,27,475 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். தினசரி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:15 வரை நடைபெற உள்ளது.
7,545 பள்ளிகள் உள்ள நிலையில், 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் 4,540 கண்காணிக்கும் படைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தேர்வறைகளில் கண்காணிப்பாளர்களாக 44,624 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல ஸ்கிரைபாக (சொல்வதை எழுதுபவர்) 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு 7,465 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 578 அரசு / அரசு உதவி பெறும் / தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30,663 மாணவர்கள், 33,696 மாணவிகள் ஆக மொத்தம் 64,359 மாணவர்களும் மற்றும் 3157 பேர் தனித் தேர்வர்களாகவும் 250 தேர்வு மையங்களில் (சிறப்பு தேர்வு மையம் மத்திய சிறை, புழல் உட்பட) தேர்வுகள் எழுத உள்ளனர். இத்தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுப் பணியில் 250 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 250 துறை அலுவலர்கள், 550 பறக்கும் படை / நிலையான படை உறுப்பினர்கள், 4100 அறை கண்காணிப்பாளர்கள்/ சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1000 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆக மொத்தம் 6150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துள்ளது.
பொதுத்தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.
உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது #DravidianModel அரசு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தேர்வு மையங்களில் எக்காரணத்தைக் கொண்டும் மின்தடை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் சிரமமின்றிச் செல்ல வசதியாகப் போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.