அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் எம்பிஏ மற்றும் மேலாண்மைப் படிப்புகளுக்கான இந்திய மாணவர் சேர்க்கை சுமார் 45 சதவீதம் சரிந்துள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
விசா நடைமுறைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்து வரும் கல்விச் செலவுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில் (GMAC) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் சேர்க்கை விகிதம் 45 சதவீதம் குறைந்துள்ளது. அதே வேளையில், இந்தியாவிலுள்ள பட்டதாரி மேலாண்மைப் படிப்புகளுக்கான சர்வதேச விண்ணப்பங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதன் விளைவாக, இந்திய மாணவர்களின் கவனம் தற்போது ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. 2019ஆம் ஆண்டில் 57 சதவீதமாக இருந்த அமெரிக்கா மீதான ஆர்வம், 2025-ல் 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கல்வி பயில்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.