’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
க.சே.ரமணி பிரபா தேவி March 01, 2026 09:44 PM

எந்த சாதியினருக்கு கல்வி இல்லை என்றார்களோ, அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ளேன் என்று அமைச்சர் கோவி செழியன் மேடையில் கண் கலங்கியவாறே பேசினார்.

கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற விழாவில்,  உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உருக்கமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’திமுக அரசில் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கப்பட்டது. கோவி செழியன் – ஆட்டுத் துறை, மாட்டுத் துறை, குடிசை மாற்று வாரியம் என்று ஏதோ ஓர் இலாகாவுக்கு அறிவிப்பார்கள், அமைச்சரவைக்குப் புதியவன்தானே என்று நினைத்திருந்த நேரத்தில், என் தங்கத் தலைவர் அறிவித்தார்.

’’எந்த சாதியினருக்கு கல்வி இல்லை என்றார்களோ, அந்த சாதியில் பிறந்த கோவி செழியன், எந்த சாதியினர் பள்ளிக்கூடம் போகக்கூடாது என்று தடுத்தார்களோ, அந்த சாதியில் பிறந்த கோவி செழியனை தமிழக அரசின் உயர் கல்வித்துறைக்கு நியமிக்கிறேன்’’ என்றார் முதல்வர் ஸ்டாலின்.

அனைவருக்கும் அனைத்தும், எல்லோர்க்கும் எல்லாம் என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல. எங்கள் தங்கத் தலைவன் ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குத் தந்த பதவி- உயர் கல்வித்துறை. இந்த எளிய தொண்டனுக்கு உயர் கல்வித்துறை தரப்பட்டது.

உயர் சாதியில் பிறந்தவனுக்குத்தான் கற்றல், கற்பித்தல் என்பார்கள். ஐயர், ஐயங்கார், சர்மா, சாஸ்திரிக்குத்தான் அவை என்றார்கள். சூத்திரன், காலிலே பிறந்தவனின் காதில் கல்வியின் ஓசை பட்டுவிடக்கூடாது என்றார்கள். மனு தர்மம், மனுஸ்மிருதி இந்த நாட்டில் எழுதிவைத்த சட்டம் அப்படியாக இருந்தது.

அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கொள்கைகளை தமிழ்நாட்டில் புழங்க வைத்த வெண் தாடி வேந்தர் தந்தை பெரியாரின் அயராத உழைப்பு, அண்ணாவின் லட்சியம் இவர்களின் மறு வடிவம், கலைஞர் உருவாக்கித் தந்த சமூக மாற்றம்.

இந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் ஏழைத் தொண்டனை உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கினார். இது கோவி செழியனுக்கு கிடைத்த வெற்றி அல்ல, அண்ணல் அம்பேத்கருக்கு கிடைத்த வெற்றி'' என்று அமைச்சர் கோவி செழியன் கண் கலங்கினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.