நுரையீரல் தொற்று... மருத்துவ உதவி கோரும் நடிகை 'காதல்' பட நடிகை!
Dinamaalai March 02, 2026 04:48 AM

தமிழ்த் திரையுலகில் 'காதல்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை மல்லேஸ்வரி, தற்போது கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நிதி உதவி கோரியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகை மல்லேஸ்வரி, கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாகச் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்று தீவிரமடைந்துள்ளதால், அவருக்குத் தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. நீண்ட நாட்களாகப் படங்களில் வாய்ப்பு இல்லாததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் சிகிச்சைக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தனது தற்போதைய நிலையை விளக்கிப் பதிவிட்டுள்ள மல்லேஸ்வரி, தனது கூகுள் பே எண்ணைப் பகிர்ந்து தம்மால் இயன்ற நிதி உதவியைச் செய்யுமாறு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' திரைப்படத்தில் நடிகை சந்தியாவின் தாயாராக நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்குத் திரையுலகிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஏற்கனவே பல மூத்த கலைஞர்கள் வறுமை மற்றும் நோயினால் பாதிக்கப்படும்போது நடிகர் சங்கம் மற்றும் சக கலைஞர்கள் உதவி வருவது வழக்கம். மல்லேஸ்வரியின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்யத் திரையுலகினர் முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.